×

அரசு பள்ளி அருகே காவு வாங்க காத்திருக்கும் பள்ளம்

சாயல்குடி. டிச.3: முதுகுளத்தூர் அருகே வெண்ணீர் வாய்க்கால் அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை, அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக மாணவர்கள் தெரிவித்தனர். முதுகுளத்தூர் அருகே வெண்ணீர் வாய்க்கால் கிராமத்தில் ஒரே வளாகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 62 மாணவர்களும், அரசு நடுநிலை பள்ளியில் 50 மாணவர்களும் படித்து வருகின்றனர். இங்குள்ள வகுப்பறை கட்டிடம் சுமார் 40 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது என்பதால், சேதமடைந்து வருகிறது. கட்டிடத்தை சுற்றி சேதம் ஏற்பட்டுள்ளதாலும், சீமை கருவேல மரம் புதர்மண்டி கிடப்பதாலும் விஷஜந்துகளின் இருப்பிடமாக இருப்பதால் மாணவர்கள் உயிர்பயத்தில் ஆபத்தான நிலையில் பாடம் பயின்று வருவதாக கூறுகின்றனர். பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாமல் திறந்த வெளியில் வகுப்பறைகள் நடப்பதால் கால்நடைகள் வந்து செல்வதால், படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. மேலும் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகள் சேதமடைந்து மாயமாகி விட்டது. தற்போது பெய்த மழைக்கு பள்ளி வளாகத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக மாணவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பெற்றோர் கூறும்போது, 62 மாணவர்கள் உள்ள தொடக்கப்பள்ளி 50 மாணவர்கள் உள்ள நடுநிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லை.

இதனால் மாணவர்கள் போதிய ஆசிரியர்கள் இன்றி பாடம் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பள்ளிக்கு தண்ணீர் தொட்டி இல்லாததால், காவிரி கூட்டு குடிநீர் குழாய் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. அதில் தண்ணீர் வருவது கிடையாது. அருகிலுள்ள குழாயில் உப்புத்தண்ணீர் மட்டுமே வருகிறது. இதனை குடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. சுவர் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டு 3 வருடங்கள் 6 மாதம் ஆகி விட்டது. சுவர் கட்ட பள்ளம் மட்டுமே தோண்டப்பட்டது. 3 வருடங்களாக பள்ளம் தோண்டி கிடக்கிறது. ஆனால் சுற்றுச்சுவர் கட்டவில்லை. தோண்டிய பள்ளத்தில் தற்போது பெய்து வரும் மழை தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பள்ளத்திற்குள் மாணவர்கள் தவறி விழுந்தால் சேற்றுக்குள் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தேங்கி கிடக்கும் தண்ணீரால் சுகாதாரக்கேடு நிலவி வருகிறது. பள்ளியில் அமைக்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து கிடக்கிறது. இது மாணவர்கள் வந்து செல்லவும், விளையாடவும் இடையூறாக உள்ளது.

தொடக்கப் பள்ளியில் ஓடு வேயப்பட்ட வகுப்பறை மற்றும் அருகிலுள்ள மற்றொரு வகுப்பறை கட்டிடங்கள் சேதமடைந்து வருகிறது. ஆசிரியர் பற்றாக்குறை, சேதமடைந்த கட்டிடங்களின் நிலைமை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து உரிய அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்து விட்டோம். கடந்த ஆகஸ்ட் மாதம் கிராமமக்கள் போராட்டம் கூட நடத்தி விட்டோம். ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. விரைவில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பள்ளிக்கு சுற்றுச்சுவர், அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என வலியுறுத்தினர்.

Tags : government school ,
× RELATED கட்டணம் பெறப்படுவதாக புகார் அரசு பள்ளியில் முதன்மைக்கல்வி அலுவலர் ஆய்வு